Wednesday, 23 December 2015

உயிர்பெற்று வரும் அழிந்து போன தனுஷ்கோடி!

ழிப்பேரலைக்குள் மூழ்கி, இன்றும் அதன் மிச்சசொச்சங்களுடன் நினைவு சின்னமாக திகழும் தமிழகத்தின் துறைமுக நகரங்களில் ஒன்றான தனுஷ்கோடி, அழிந்து போன 52-ம் ஆண்டில் இன்று கால் பதிக்கிறது.

இந்திய நாட்டின் தென்கோடி எல்லைப்பகுதி தனுஷ்கோடி. ராமனின் கையில் இருந்த வில்லினை போன்ற தோற்றம் கொண்ட நிலப்பகுதி இது என்பதால்,  இதற்கு தனுஷ்கோடி என்ற பெயர் வந்ததாக வரலாறு உண்டு. வரலாற்றில் இடம் பிடித்திருக்கும் தனுஷ்கோடி,  இன்றுவரை மனிதர்கள் வசிக்க தகுதியற்ற பகுதியாகத்தான் அரசால் கூறப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் 1964-ம் ஆண்டில் ஏற்பட்ட கோரப்புயல்தான்.
1964-ம் ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி,  தெற்கு அந்தமான் பகுதியில் புயல் ஒன்று உருவானது. இந்த புயல் மெல்ல மெல்ல வலுப்பெற்று இலங்கையை நோக்கி நகர்ந்தது. மணிக்கு 400 முதல் 550 கி.மீ வேகத்தில் வந்த இந்த புயல்,  டிசம்பர் 22-ம் தேதி இலங்கையின் தமிழர்கள் வாழும் பகுதிகளான வவுனியாவை தாக்கியது. அதன் பின் வங்கக்கடலில் உள்ள பாக்ஜலசந்தி கடலில் மையம் கொண்ட இந்த புயல்தான்,  23-ம் தேதி அதிகாலை தனுஷ்கோடியை நோக்கி வந்தது. இந்த புயலின் வெளிப்பாடாக மணிக்கு 280 கி.மீ வேகத்தில் காற்று வீசியதுடன், கடும் மழையும் பெய்தது. இந்த புயல்தான் தங்கள் வாழ்க்கையை புரட்டி போட உள்ளது என்பதை அறியாத மக்கள்,  வழக்கம் போல் தங்கள் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இதில் பாம்பன் - தனுஷ்கோடி இடையிலான பயணிகள் ரயிலும் ஒன்று.
இந்தியா வழியாக இலங்கை செல்ல விரும்புபவர்களுக்கென அந்நாளில் போட் மெயில் சர்வீஸ் இருந்து வந்தது. ரயில் மற்றும் கப்பல் வழி பயணமான  இதில்,  சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் ரயிலில் தனுஷ்கோடிக்கு முதலில் வரவேண்டும். அங்கிருந்து இலங்கை செல்ல தயாராக இருக்கும் இர்வின் - கோஷன் என்ற கப்பலில் பயணித்து  இலங்கையை அடையலாம். இது தவிர தனுஷ்கோடிக்கு வர விரும்பும் யாத்திரைவாசிகள் மற்றும் உள்ளூர் பயணிகளுக்காக ‘வாட்டர் டாங்’ எனப்படும் பயணிகள் ரயிலும் நாள்தோறும் இயங்கி வந்தது.
23-ம் தேதி நள்ளிரவு இந்த ரயில் தனுஷ்கோடியை நோக்கி வந்து கொண்டிருந்தது. தனுஷ்கோடியை அடைய சில நூறு அடி தூரமே இருந்த நிலையில், பலத்த காற்றுடன் மழையும் கொட்ட துவங்கியது. இதனால் தனுஷ்கோடிக்கு ரயில் வருவதற்கான அனுமதி சிக்னல் கொடுக்கப்படவில்லை. கடும் இருட்டில் மழையும் கொட்டியதால்,  ரயில் டிரைவரால் இந்த சிக்னலை பார்க்க  முடியவில்லை. இதனால் பயணிகள் ரயில் தனுஷ்கோடியை நோக்கி செல்ல, அந்நேரத்தில் எழுந்த ஆழிப்பேரலை ரயிலின் 6 பெட்டிகளை ஆழ்கடலுக்குள் இழுத்து சென்றது. நள்ளிரவு நேரம் என்பதால் ஜன்னல்கள், கதவு என அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் ரயிலில் பயணித்த 115 பேரும் பரிதாபமாக பலியாகினர். ஆழிப்பேரலையின் இந்த கோர தாண்டவம் பற்றிய செய்தி கூட இரு நாட்களுக்கு பின்னரே அரசு நிர்வாகங்களுக்கு தெரிய வந்தது.
இதன்பின்னரும் தொடர்ந்து வீசிய புயலில் சிக்கி தனுஷ்கோடி நகரமே உருக்குலைந்து போனது. இங்கிருந்த ரயில் நிலையம், அஞ்சலகம், கோயில்கள், தேவாலயம், நகரியம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் என ஒன்று கூட புயலுக்கு தப்பவில்லை.  ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட பிரமாணட கட்டடங்களே கடலால் துவம்சம் செய்யப்பட்ட நிலையில், ஏழை மீனவர்களின் வீடுகள் என்னவாகியிருக்கும் என நினைத்து கூட பார்க்க முடியவில்லை. அந்தளவிற்கு சுமார் 5 மீட்டர் உயரத்திற்கு கடல் நீராலும், மணல் திட்டுகளாலும் தனுஷ்கோடி நகரம் மூழ்கடிக்கப்பட்டது. இதில் 1800-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.
புயலின் கோரத்தை உணர்ந்த அரசு, தனுஷ்கோடி பகுதியை இனி மனிதர்கள் வாழ தகுதியற்ற பகுதியாக (Unfit for living) அறிவித்தது. தனுஷ்கோடியில் வசித்த மக்களுக்காக புதிய வாழ்விடங்கள் உருவாக்கப்பட்டு அங்கு குடியமர்த்தப்பட்டனர்.
கடல் வழி போக்குவரத்து வளர்ந்து வரும் இக்காலத்தில்,  இருபுறமும் கடல் சூழ்ந்த,  மனிதர்கள் வாழ தகுதியற்ற பகுதியாக அறிவிக்கப்பட்ட தனுஷ்கோடியை, மீண்டும் மனிதர்கள் வாழ தகுதியுடைய பகுதியாக மாற்றும் பணிகள் நடந்து வருகிறது. அதன் முதல் கட்டமாக இந்திய நிலப்பகுதியின் எல்லை வரை சாலை அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன. தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் சுமார் 53 கோடி ரூபாய்  மதிப்பீட்டில் இந்த பணியை துவக்கியுள்ளனர். 64-ம் ஆண்டு புயலில் மிச்சமாக இருந்த முகுந்தராயர் சத்திரம் பகுதியில் இருந்து, இந்திய நிலப்பரப்பின் எல்லையான அரிச்சல் முனை வரை சாலை அமைக்கும் பணிகள் விரைவாக நடந்து வருகிறது. இது தவிர ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் மீனவர்களுக்கு உதவும் வகையில்,  துறைமுகம் ஒன்றும் முகுந்தராயர் சத்திரம் பகுதியில் அமைககப்பட்டு வருகிறது.
இவை தவிர தனுஷ்கோடி முதல் இலங்கையின் தலைமன்னார் வரையிலான 23 கி.மீ தூரத்திற்கு,  கடலில் பாலம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.  சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றவிடாமல் தடுத்த பாரதிய ஜனதா கட்சியினர்,  தற்போது தங்கள் நிலையில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு ‘மாற்று பாதையில் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவோம்’ என்கின்றனர். இவையெல்லாம் கனவாகவே இருந்துவிடாமல் நனவாகினால், 64-க்கு முந்தையை தனுஷ்கோடி நகரத்தை நாளைய தலைமுறையினர் காண வாய்ப்பு ஏற்படும்.
அது மட்டுமின்றி கடல் கொண்ட தனுஷ்கோடி பகுதியில் குடிதண்ணீர், சாலை, மின்சாரம் என எந்த அடிப்படை வசதியும் இல்லாத நிலையிலும்,  தனுஷ்கோடி கடலை தங்களை தாலாட்டும் தாயின் மடியாக கருதும் மீனவர்கள்,  இன்னும் அந்த மணற்குன்றுகளுக்கு மத்தியில் வாழ்வதையே வரமாக கருதி வசித்து வருகின்றனர்.
அந்த மீனவர்களுக்கு மட்டுமல்லாது,  நாடு முழுவதிலும் இருந்து தனுஷ்கோடியை காணவரும் சுற்றுலா பயணிகளுக்கும் 52 ஆண்டுகளுக்கு பின் மேற்கொள்ளப்பட இருக்கும் இந்த திட்டங்கள் புதிய நம்பிக்கையினை ஏற்படுத்தும்.

No comments:

Post a Comment