துணிச்சலுடன் செய்யும் காரியத்திற்கு வெற்றி நிச்சயம் என்பதற்கு எடுத்துக்காட்டாக, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே கீழாய்க்குடியைச் சேர்ந்த மாணவர் சுந்தரபாண்டி திகழ்கிறார். சராசரி மாணவர்களைப் போல் இளமைப் பருவத்தில் துள்ளித் திரிந்தவர். நான்காம் வகுப்பு படித்த போது வீட்டு மொட்டைமாடி அருகே செல்லும் உயர் அழுத்த மின்கம்பியை விளையாட்டாக தொட்ட போது மின்சாரம் தாக்கி இரண்டு கைகளும் கருகின.
மதுரை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு இரண்டு கைகளும் அகற்றப்பட்டது. நம்பிக்கையை இழக்காத சுந்தரபாண்டி, சக மாணவர்களைப் போன்று நீச்சல் பயிற்சியில் கவனம் செலுத்தினார். இதன் மூலம் பல சாதனைகள் நிகழ்த்தி வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.
சென்னை வேளச்சேரியில் நடந்த மாற்றுத் திறனாளி களுக்கான மாநில நீச்சல் போட்டியில் கலந்துகொண்டு தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் பெற்று சாதனை நாயகனாக திகழ்கிறார்.
இது எப்படி சாத்தியம், சுந்தரபாண்டி கூறுகிறார்: நான் சவுராஷ்ட்ர மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறேன். எனது தந்தை முருகேசன், தாய் மகேஸ்வரி விவசாய வேலை செய்கிறார்கள். பத்து வயதில் மின் விபத்தில் கைகளை இழந்தேன். எனது சுய முயற்சியினால் ஒரு வருடத்தில் எழுத கற்றுக் கொண்டேன். எனது பணியினை, நானே செய்து கொள்கிறேன். தொடர்ந்து கிராம கண்மாய் நீரில் குளிக்கும் போது நீச்சல் கற்றுக் கொண்டேன்.
தொடர்ந்து சென்னையில் மாற்றுத் திறனாளிகளுக்கான நீச்சல் போட்டிகள் நடப்பதாக எங்கள் பகுதி புதுவாழ்வு திட்ட ஒருங் கிணைப்பாளர்கள் சுசிலா, ராஜேஸ்வரி கூறினர். எனக்கு சிவகங்கையில் உள்ள மாவட்ட விளையாட்டு மையத்தில் இரண்டு நாள் நீச்சல் பயிற்சி கொடுத்தனர். ஜூலை 24, 25 ல் நடந்த 3 வது மாநில பாரா ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு, 100 மீ., பேக் ஸ்ட்ரோக் ஜூனியர் மற்றும், 100 மீ., பிரஸ்ட் ஸ்ட்ரோக் போட்டியில் முறையே தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம், ரூ. 3 ஆயிரத்து 500 ரொக்கப்பரிசு பெற்றேன், என்றார்.
No comments:
Post a Comment