Saturday, 24 October 2015

Great man

தமிழ் மொழி தவிர வேறு மொழி பேச, படிக்க தெரியாமல் குண்டு சட்டியில் குதிரை ஓட்டும் இளைஞர்கள் மத்தியில் பள்ளி படிப்பு கூட முடிக்காமல் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராட்டி, குஜராத்தி, வங்கம் ஆகிய 8 மொழிகளில் பேசி பக்தர்களை கவர்ந்து வருகிறார் தன்னம்பிக்கை மனிதர் புஷ்பரத்தினம்.
ராமேஸ்வரம் வீரபத்திரன் கோயில் தெருவைச் சேர்ந்த இவருக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனர். வலதுகாலில் ஏற்பட்ட வலிக்கு தவறான சிகிச்சை பெற்றதால் காலை இழக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இருந்தும் தன்னம்பிக்கை இழக்காத புஷ்பரத்தினம், பிறர் உதவியின்றி உழைத்துவாழ வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். சிறு வயது முதலே கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தீர்த்தம் இறைத்து ஊற்றும் பணியில் ஈடுபட்டார். தற்போது கோயில் வரலாற்று புத்தகங்களை 3 சக்கர வாகனத்தின் உதவியுடன் அலைந்து திரிந்து விற்பனை செய்துவருகிறார். இதற்கு மொழி பிரச்னையாக இருந்ததால் தமிழ் மட்டுமின்றி இதர மொழிகளையும் படிக்கவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.
படிப்படியாக இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராட்டி, குஜராத்தி, வங்கம் ஆகிய 8 மொழிகளை கற்று கைதேர்ந்துள்ள இவர், வெளிமாநிலங்களிலிருந்து வரும் பக்தர்களிடம் அவரவர் மொழியில் சரளமாக பேசி புத்தகங்களை விற்பனை செய்துவருகிறார். இதன்மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.150 முதல் ரூ.300 வரை சம்பாதித்து வருகிறார். இந்த வருவாய் அன்றாட குடும்ப செலவுக்கு போதுமானதாக இல்லை என்பதால் விற்பனையை மேலும் அதிகரிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். கோயில் வரலாற்று புத்தகத்தை கூவி, கூவி விற்பனை செய்வதன் மூலம் சுவாமி, அம்மன் அருள் இன்று அல்லது நாளை கண்டிப்பாக கிடைக்கும் என நம்புகிறார்.
படித்து பட்டம் பெற்று வேலை கிடைக்காமல் விரக்தியில் திரியும் இளைஞர்களுக்கு புஷ்பரத்தினம் முன் உதாரணமாக திகழ்கிறார். இவரது தன்னம்பிக்கையை பாராட்ட விரும்புவோர் அலைபேசி எண்: 76394 94569 தொடர்பு கொள்ளலாம்

No comments:

Post a Comment