Saturday, 24 October 2015

சுத்தமான நீரில் தயாரான எரிவாயுவில் இயங்கும் டூவீலர்

புதுக்கோட்டை : சுத்தமான தண்ணீரில் சோப்பு மேக்கர் (வேதிப்பொருள்) கலந்து அதன்மூலம் காஸ் தயாரித்து மோட்டார் என்ஜினை இயக்கி புதுக்கோட்டை மெக்கானிக் சாதனை படைத்துள்ளார். 

   புதுக்கோட்டை காமராஜபுரம் 8ம் வீதியை சேர்ந்தவர் சிவக்குமார் (36). 10ம் வகுப்பு வரை படித்துள்ள இவர் தனது தந்தை ஹரிகிருஷ்ணனுடன் இணைந்து இப்பகுதியில் கடந்த 8 வருடமாக நான்கு சக்கர வாகனம் பழுதுநீக்கும் மெக்கானிக் கடை வைத்துள்ளார். தனது வழக்கமான மெக்கானிக் தொழிலுக்கு இடையில் மாற்று எரிபொருள் கண்டுபிடித்து மோட்டார் வாகனங்களை இயக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், அதற்கான முயற்சியில் இறங்கினார். 

    பல வருட முயற்சிக்கு பிறகு உப்பு கலக்காத சுத்தமான தண்ணீரில் சோப்பு தயாரிக்க பயன்படும் சோப்பு மேக்கர் என்று அழைக்கப்படும் சோடியம் ஹைட்ராக்சைடு என்ற பொருளை கலந்து அதிலிருந்து வெளியேறும் காஸ் மூலம் வாகன இன்ஜின்களை இயக்கும் முறையை கண்டுபிடித்துள்ளார். 

    இதற்காக ஒரு பிளாஸ்டிக் டேங்கில் சுத்தமான தண்ணீருடன்  சோடியம் ஹைட்ராக்சைடை கலக்குகிறார். பின்னர் இந்த தண்ணீர், 12 வோல்ட் பேட்டரியின் மூலம் இணைப்பு கொடுக்கப்பட்ட 26 ஸ்டீல் பிளேட் மற்றும் ஓரிங் பொருத்தப்பட்ட குடுவைக்குள் செல்கிறது. அப்போது அதற்குள் வேதிவினை நிகழ்ந்து காஸ் வெளியேறுகிறது. 

    இந்த காஸ் ஒரு டியூப் வழியாக ஒரு பலூனில் அடைக்கப்படுகிறது. பின்னர் மோட்டார் பைக் என்ஜினிற்குள் இந்த பலூனில் இருக்கும் காஸ் டியூப் வழியாக உள்ளே செல்லும் வகையில் பொருத்தப்படுகிறது. இப்போது அந்த மோட்டார் பைக்கினை இயக்கினால், இந்த பலூனில் இருக்கும் காஸ்  அந்த மோட்டார் என்ஜின் இயங்குகிறது. பலூனில் இருக்கும் காஸ் தீர்ந்தபின் என்ஜின் நின்று விடுகிறது. 

    இதுகுறித்து மெக்கானிக் சிவக்குமார் கூறுகையில், இந்த காஸ் மூலம் அனைத்து வாகனங்கள் மற்றும் ஜெனரேட்டர் என்ஜின்களை இயக்க முடியும் என்பதை கண்டுபிடித்துள்ளேன். இதனை தற்போது சிறிய அளவில் செய்துள்ளேன். பிளேட் மற்றும் ஓரிங் பொருத்தும் எண்ணிக்கையை அதிகரிக்கின்றபோது அதிக அளவில் காஸ் உற்பத்தி செய்து பயன்படுத்தலாம். இந்த எரிபொருளால் மாசு ஏற்படாது, அதிக வெப்பம் ஏற்படாது. பெட்ரோலுக்கு சிறந்த மாற்று எரிபொருளாகும்.  இந்த கிட் தயாரிக்க  ரூ.50 ஆயிரம் வரை செலவு செய்துள்ளேன். சிறிய அளவில் தயாரான இந்த கருவியை கொண்டு 10 நிமிடத்தில் தயாரான காஸ் மூலம் 5 நிமிடம் டூவீலரை இயக்க செய்யலாம். 

    தண்ணீர் டேங்கில் ஊற்றப்பட்ட தண்ணீர் குறையும் வரை காஸ் தயாராகிக்கொண்டிருக்கும். ஓரிங் பிளேட் அதிகம் சேர்த்தால் இன்னும் அதிகம் காஸ் தயாரிக்கலாம். இந்த முயற்சிக்கு அரசும், சமூக ஆர்வலர்களும் உதவிகள் செய்தால் இதனை நடைமுறைக்கு கொண்டுவருவேன் என்றார்.

No comments:

Post a Comment