Saturday 20 February 2016

கடைசி டெஸ்டில் அதிவேக சதம்: மெக்கல்லம் ஓய்வுக்கு முன் உலக சாதனை!

சதமடித்த மெக்கல்லம் | படம்: கெட்டீ இமேஜஸ்தனது கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடிவரும் நியூஸிலாந்தின் ப்ரெண்டன் மெக்கல்லம், டெஸ்ட் போட்டிகளில் அதிவேக சதம் அடித்து உலக சாதனை படைத்தார். வெறும் 54 பந்துகளில் சதமெடுத்து அவர் இதை சாதித்தார்.
ஆஸ்திரேலியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நியூஸிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் 2-வது டெஸ்ட் போட்டி க்ரைஸ்ட்சர்ச் நகரில் நேற்று தொடங்கியது. முதலில் ஆடிய நியூஸி. அணி 32 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்துக் கொண்டிருந்த வேளையில் மெக்கல்லம் களமிறங்கினார்.
ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடத் துவங்கியவர் 39 ரன்கள் எடுத்திருந்தபோது பாட்டின்ஸன் பந்தில் மார்ஷிடம் கேட்ச் கொடுத்தார். ஆனால் அது நோ பால் என அறிவிக்கப்பட்டதால் அதிர்ஷ்டவசமாக ஆட்டமிழக்காமல் தப்பினார். அங்கிருந்து தொடர்ந்து ஆஸி. பந்துவீச்சை விளாசி தள்ளிய மெக்கல்லம் வெறும் 54 பந்துகளில் சதத்தை எட்டினார்.
தனது கடைசி மற்றும் 101-வது டெஸ்ட் போட்டியில் ஆடும் மெக்கல்லத்தோடு கோரே ஆண்டர்சனும் இணைந்து தனது அணியை சரிவிலிருந்து மீட்டார்.
மெக்கல்லம் 100 ரன்கள் எடுப்பதற்குள் 4 சிக்ஸர்களை அடித்திருந்தார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் (மொத்தம் 106 சிக்ஸர்கள்) அடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
மெக்கல்லம் 145 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். இதில் மொத்தம் 21 பவுண்டரிகளும், 6 சிக்ஸர்களும் அடக்கம் ஆண்டர்சன் 72 ரன்களுக்கு வெளியேறினார். இந்த இணை 110 பந்துகளில் 179 ரன்களை சேர்த்திருந்தது. இறுதியில் நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 370 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதற்கு முன் 1986-ஆம் வருடம், மேற்கிந்திய தீவுகள் வீரர் விவ். ரிச்சர்ட்ஸ் 56 பந்துகளில் சதம் எடுத்ததுதான் டெஸ்ட் போட்டிகளில் குறைந்த பந்துகளில் சதம் எடுத்த சாதனையாக இருந்தது.
அதே போல பாகிஸ்தானின் மிஸ் பா உல் ஹக்கும் 2014-ஆம் வருடம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 56 பந்துகளில் சதம் அடித்திருந்தார்.

No comments:

Post a Comment