Friday 20 November 2015

virus

மதுரை: ''தமிழகத்தில் இரண்டு முதல் மூன்று வயது குழந்தைகளுக்கு கை, கால், வாய் கொப்புள தொற்று நோய் வேகமாக பரவி வருகிறது. மழைக்காலத்தில் காற்றின் மூலம் வைரஸ் பரவுவதால் குழந்தைகளுக்கு 'மாஸ்க்' அணிவது அவசியம்,'' என்கிறார், மதுரையைச் சேர்ந்த குழந்தைகள் நல நிபுணர் டாக்டர் ஜி. பாஸ்கர்.அவர் கூறியது: கடந்த ஒரு மாதமாக தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் இந்நோய் பரவி வருகிறது. முதியோர்கள் தும்மும் போதும், இருமும் போதும் இந்த ('காக்சாக்கி வைரஸ் ஏ டைப் 16, என்ட்ரோ வைரஸ் 71') வைரஸ்கள் காற்றின் மூலம், குழந்தைகளுக்கு எளிதில் பரவும். பெரியவர்களுக்கு இதன் பாதிப்பு குறைவு தான். இரண்டு முதல் மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகள் தான், அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். ஒரு குழந்தையிடம் இருந்து மற்ற குழந்தைகள் எளிதாக பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக மழலைப்பள்ளிகளில் பயிலும் குழந்தைகள்தான், இதன் இலக்காகி வருகின்றனர்.ஒரு குழந்தையிடமிருந்து இன்னொரு குழந்தைக்கு நோய் பரவ, இரண்டு முதல் மூன்று நாட்கள் ஆகலாம். மூன்று நாட்கள் காய்ச்சல் நிலையிலேயே, மற்ற குழந்தைகளுக்கும் பரவிவிடும்.அறிகுறி என்ன: மூன்று நாட்கள் காய்ச்சல், தும்மல், இருமல் இருக்கும். அதன்பின் காய்ச்சல் குறைந்து விரல் இடுக்கில், உள்ளங்கை, முழங்கை, முழங்கால், பிட்டபகுதி, பாதத்தின் மேற்பகுதியில் கொப்புளங்கள் வரும். வாய், உதடு, நாக்கு, உட்பகுதியில் வெள்ளை நிறத்தில் புண்கள் தோன்றும். காற்று மூலம் மட்டுமின்றி, கொப்புள நீர் பட்டாலும் வைரஸ் பரவலாம். வாயில் எச்சில் ஊறும். சாப்பிட முடியாது. அரிதாக நரம்பு மண்டலத்தை தாக் கலாம்.என்ன சிகிச்சை: அலர்ஜி அல்லது சின்னம்மை என்று நினைத்து சில டாக்டர்கள் சிகிச்சை அளிக்கின்றனர். மருத்துவமனையில் உள்நோயாளியாக தங்கி சிகிச்சை பெற வேண்டியதில்லை. ஐந்து நாட்கள் கழித்து தானாக குறைந்துவிடும். 
காய்ச்சலுக்கான பாராசிட்டமால் மருந்து கொடுத்து, 'காலமைன்' லோஷன் தடவினால் போதும். 'ஆன்டிபயாடிக்' மருந்துகள் தேவையில்லை.பாதுகாப்பது எப்படி: குழந்தைகளின் ஆடைகளை துவைத்து சுத்தமாக வைக்க வேண்டும். நகங்களில் அழுக்கு சேராமல் வெட்ட வேண்டும். குழந்தைகளை அடிக்கடி சோப்பு கொண்டு கை கழுவச் செய்வது முக்கியம். அவர்களின் மலத்திலும் இந்த வைரஸ் நீண்டநாட்கள் இருக்கும். பாதிக்கப்பட்ட குழந்தை திறந்தவெளியில் மலம் கழித்தால், காற்று மூலம் மற்ற குழந்தைகளுக்கு வேகமாக பரவும். எனவே, வெளியே செல்லும் போது குழந்தைகளுக்கு 'மாஸ்க்' அணிவித்து, வைரஸ் நோயிலிருந்து பாதுகாக்கலாம், என்றார்.

No comments:

Post a Comment